நாட்டிற்காகத் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த இந்தியத் த்ரோபால் வீரர் அமர்தீப் குமார், விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் அரசு வேலை பெறுவதற்காக நீண்ட காலமாகப் போராடித் தோற்று, தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனது குடும்பத்தினருடன் இணைந்து சாலையோரக் கடையில் காய்கறி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கண் கலங்க வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், அவர் வாங்கிய பதக்கங்கள் சுவரில் பெருமையுடன் தொங்கிக் கொண்டிருக்க, அதற்கு முன்பாகக் காய்கறித் தட்டுக்களை வைத்து அவர் வாடிக்கையாளர்களுக்குக் காய்கறி விற்றுக்கொண்டிருக்கும் காட்சி காண்போரை வேதனைப்படுத்தியுள்ளது. ஒரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பிற்கும், அவரது தற்போதைய நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள இந்தத் துயரமான முரண் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Heartbreaking visuals 💔
Ranchi Gold medalist selling vegetables on road 😢
This is Amardeep Kumar from Ranchi, a throwball player who represented India in Malaysia and won gold medal.
Now he is selling vegetables with medals hanging on the wall 💔💔 pic.twitter.com/oKoqpZumjR
— Desi Lord (@DesiLord_) August 31, 2026
அமர்தீப் குமார் சாதாரணமான வீரர் அல்ல; மலேசியாவில் நடைபெற்ற த்ரோபால் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தங்கப்பதக்கம் வென்றவர். அதுமட்டுமின்றி, அவர் இதுவரை நான்கு முறை சர்வதேச அளவில் நாட்டிற்காகப் போட்டியிட்டுள்ளார். இத்தகைய பெருமைமிக்க சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அவர், தனது குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், பிழைப்புக்காகவும் தற்போது காய்கறி விற்கும் தொழிலைச் செய்து வருவது அவரது விளையாட்டுப் பயணத்தைப் பின்தொடர்ந்தவர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது விளையாட்டுச் சாதனைகளுக்குப் பிறகு அரசு வேலைக்காக விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பலமுறை விண்ணப்பித்தும், தனக்கு எங்குமே முறையான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று அமர்தீப் முன்னதாகக் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, நாட்டிற்காகப் வியர்வை சிந்திப் பதக்கங்களை வென்ற வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுவது ஏன்? என்ற நியாயமான கேள்சியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். வெற்றி பெற்ற சில நாட்களுக்கு மட்டும் கொண்டாட்டங்களில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் விளையாட்டு வீரர்கள், தங்களது விளையாட்டு வாழ்க்கை முடிந்த பிறகு கைவிடப்படுவதும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதும் விளையாட்டின் மீது பற்று கொண்ட அனைவரையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
