இன்றைய நவீன வாழ்க்கை முறையில் 20 முதல் 30 வயதுக்குள்ளேயே பலருக்கும் தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது. இதற்கு வயது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடலில் சேரும் நச்சுகளால் முடியின் நிறத்தைத் தரும் மெலனின் செல்கள் பாதிக்கப்படுவதே முக்கியக் காரணமாகும்.
ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அதைச் சுற்றியுள்ள மற்ற முடிகளுக்கும் நரை பரவும் என்ற கருத்து அறிவியல் ரீதியாக முற்றிலும் தவறானதாகும். மனித தலையில் உள்ள ஒவ்வொரு முடியின் நிறமும், அந்தந்த முடியின் வேர்க்கால்களில் (Hair Follicles) இருக்கும் மெலனின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு நரைமுடியைப் பிடுங்குவதால், அருகில் உள்ள முடிகளின் மெலனின் அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது. பிடுங்கப்பட்ட அதே வேர்க்காலில் இருந்து மீண்டும் ஒரு நரைமுடி மட்டுமே வளருமே தவிர, அது பக்கத்து முடிகளை நரையாக மாற்றாது.
இருப்பினும், தலைமுடியை அடிக்கடி பிடுங்குவது வேர்க்கால்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் முடியின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டு, அந்த இடத்தில் நிரந்தரமாக முடி வளராமல் போகவோ அல்லது பாக்டீரியா தொற்று உருவாகி வீக்கம் ஏற்படவோ வாய்ப்புள்ளது.
இயற்கை முறையில் நரைமுடி உருவாவதைத் தடுக்க மனஅழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். அதிக கவலை உடலில் உள்ள ஸ்டெம் செல்களைப் பாதித்து மெலனின் உற்பத்தியைக் குறைப்பதால், தினமும் நல்ல தூக்கம், யோகா மற்றும் தியானம் ஆகியவற்றைப் பின்பற்றி நரைமுடியைத் தாமதப்படுத்தலாம்.
