மகள்களின் கல்விக்காக காலில் இருந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு வெறுங்காலில் ஓடி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமாபாய் ரண்வீருக்கு தற்போது அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. பீட் மாவட்டம் அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய், அண்மையில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். ஓட்டத்தின் நடுவே அவரது செருப்பு கழன்று தொந்தரவு ஏற்பட்டதால், அதை கையில் எடுத்துக்கொண்டு வெறுங்காலில் தொடர்ந்து ஓடியுள்ளார். இளம் ஓட்டப்பந்தய வீரர்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்த ரமாபாயின் விடாமுயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு ரூ.3,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

ரமாபாயின் வாழ்க்கைப் பின்னணி இந்த வெற்றியை மேலும் நெகிழ்ச்சிக்குரியதாக மாற்றியுள்ளது. ஓர் அகாதெமியில் சமையலராகப் பணியாற்றி வரும் அவர், குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை தனியாகச் சுமந்து வருகிறார். மும்பையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அவரது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரு மகள்களின் வளர்ப்பு மற்றும் கல்விக்கான முழுப் பொறுப்பும் ரமாபாயின் தோள்களில் விழுந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், தனது மகள்களின் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். இதற்காகவே மராத்தான் போட்டியில் பங்கேற்று கிடைத்த பரிசுத் தொகையையும் மகள்களின் கல்விக்காக பயன்படுத்த முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமாபாயின் போராட்டக் கதையைப் பற்றி செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது விடாமுயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து, மகாராஷ்டிர அரசு அவருக்கு உதவ முன்வந்துள்ளது. மாநில சமூகநீதித் துறை அமைச்சர் சஞ்சய் ஷிர்சாட், ரமாபாயின் மகள்களின் கல்விக்கும் குடும்பத்தின் பராமரிப்புக்கும் அரசு நிதியுதவி வழங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் மகள்களின் கல்விச் செலவைச் சமாளிக்க முடியாமல் தவித்த ரமாபாய்க்கு அரசு ஆதரவு கிடைத்துள்ளது. தாயின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் தற்போது அவரது மகள்களின் எதிர்காலத்துக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

செருப்பு இல்லாமல் ஓடியது வெறும் ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக அல்ல; தனது மகள்களின் கல்விக்காக போராடிய ஒரு தாயின் உறுதியின் வெளிப்பாடாகவே ரமாபாயின் செயல் பார்க்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து ரூ.3,000 வென்றதோடு, தனது வாழ்க்கைப் போராட்டத்தையும் உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். “இரு மகள்களின் கல்விச் செலவை என்னால் சமாளிக்க முடியவில்லை” என்று ரமாபாய் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசு உதவ முன்வந்திருப்பது அவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. வெறுங்காலில் ஓடிய அந்தத் தாயின் முயற்சி, இறுதியில் மகள்களின் கல்விக்கான புதிய பாதையைத் திறந்துள்ளது.