மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பும் சோகமும் கலந்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் உறவுமுறை பேத்தியான பிரிஷ்டி முகர்ஜி (28), பீர்பூம் மாவட்டத்தில் உள்ள குறும்பா கிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் உயிரிழந்து கிடந்தது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று முதற்கட்டமாக சந்தேகப்படும் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜியின் தாயவழி உறவினரும், உள்ளூர் தவெக தலைவருமான நிஹார் முகர்ஜியின் மகள்தான் பிரிஷ்டி. போல்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் அவர் அலுவலக சாரா பணியாளராக வேலை பார்த்து வந்தார். எனினும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம்  வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி கிட்டத்தட்ட 26,000 ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன.

அந்தப் பட்டியலில் பிரிஷ்டி முகர்ஜியின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், உடல்நலக் குறைவு காரணமாக ஒரே ஒரு நாள் வேலை பார்த்துவிட்டுத் தான் விலகிவிட்டதாகவும், சம்பளம் கூட வாங்கவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரிஷ்டி கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான மன அழுத்தத்தால்  அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்குத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழந்த வேலை மற்றும் அதன் தொடர்பான சட்டச் சிக்கல்களும், குடும்ப வட்டத்தில் நிலவிய விவாகரத்து தொடர்பான சூழல்களுமே அவரது மன உளைச்சலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் முழுமையான போலீஸ் விசாரணைக்குப் பின்னர்தான் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும். மம்தா பானர்ஜியின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்த திடீர் சோக மரணம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.