கர்நாடக மாநிலத்தில், 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்ததோடு, அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்த ஈரண்ணா படிகர் என்ற நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தனது சொந்த கடனை அடைப்பதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஆன்லைனில் வேலை தேடும் பல இளம்பெண்களை இவர் திட்டமிட்டு வலையில் வீழ்த்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

​பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் ஈரண்ணா படிகரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பல ஆணுறைகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடும் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, பணத்தைப் பறித்தது மட்டுமின்றி அவர்களைத் தவறான வழியிலும் அவர் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

​இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைனில் வேலை தேடுபவர்கள் முகவரி தெரியாத நபர்களிடமும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் கேட்பவர்களிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஈரண்ணா படிகரிடம் வேறு யாரெல்லாம் ஏமாந்துள்ளனர் என்பது குறித்தும், இந்த மோசடியில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.