திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் தவறவிடக் கூடாத ஒரு அற்புதமான அசைவ உணவகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒலக்கூர் ஜங்ஷனைக் கடந்து ஏ2பி உணவகத்திற்குச் சற்று முன்பாக அமைந்துள்ள ‘ஹோட்டல் குரு’ எளிய தோற்றத்தில் இயங்கி வந்தாலும், தரத்திலும் சுவையிலும் அசத்தி வருகிறது.

இங்குப் பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படும் மட்டன், சிக்கன் மற்றும் மீன் குழம்பின் சுவை அலாதியானது என்றும், குறிப்பாகத் தலைக்கறி உணவு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். செயற்கையான இன்ஸ்டன்ட் மசாலாப் பொடிகளைத் தவிர்த்துவிட்டு, முற்றிலும் வீட்டு முறை சமையலாகவும் ஆரோக்கியமான முறையிலும் இங்கு உணவுகள் தயாரிக்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.

மதிய உணவு நேரத்திற்கு மட்டுமே செயல்படும் இந்த உணவகம் பிற்பகல் 2:30 மணியளவில் மூடப்பட்டுவிடுகிறது. உணவகத்தின் உரிமையாளர் திரு. ரவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களே சமையல் வேலைகள் முதல் பரிமாறுவது வரை அனைத்தையும் கவனித்துக்கொள்வது கூடுதல் சிறப்பு.

முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்த ரவி, தற்போது இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்; உணவகத்திற்குள் அவரோடு எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தையும் அவர் பெருமையுடன் மாட்டி வைத்துள்ளார்.

“>

 

இந்த உணவில் சாப்பிட்ட பின் அசைவ உணவருந்தியதற்கான எந்தவிதச் செரிமானத் தொந்தரவுகளோ அல்லது சோர்வோ ஏற்படுவதில்லை என்றும், திண்டிவனத்தைக் கடந்து சென்னை செல்பவர்கள் தயங்காமல் இந்த உணவகத்தை ஒருமுறை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்றும் எம்.பி ரவிகுமார் பரிந்துரைத்துள்ளார்.