மகள்களின் கல்விக் கட்டணத்துக்காக 47 வயது தாய் ஒருவர் காலில் செருப்பு இல்லாமல் மராத்தான் போட்டியில் ஓடி முதல் பரிசை வென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ‘அம்ருத் ஓட்டம்’ போட்டியில் ரமாபாய் ரண்வீர் பங்கேற்றார். சேலை அணிந்தபடியே ஓட்டத்தில் கலந்துகொண்ட அவர், மழையால் சாலை சேறும் சகதியுமாக இருந்த நிலையிலும் விடாமுயற்சியுடன் ஓடி வெற்றி பெற்றார். போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த அவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வெற்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரமாபாயின் வாழ்க்கைப் பின்னணியும் அவரது முயற்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரண்டு மகள்களின் கல்வியைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். குடும்பத்தின் பொருளாதார நிலை சிரமமாக இருந்ததால், மகள்களின் கல்விச் செலவுக்கு பணம் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அம்பாஜோகாயில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் அவர் பங்கேற்க முடிவு செய்தார். எந்தவிதமான சிறப்பு பயிற்சியும் இல்லாமல், தனது மன உறுதியை மட்டுமே நம்பி போட்டியில் ஓடியுள்ளார்.

https://www.facebook.com/watch/?v=4392941284305583

“மகள்களின் கல்விக்காக எவ்வளவு சிரமம் வந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்” என்று ரமாபாய் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தினமும் போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றபோது அங்கிருந்த பார்வையாளர்கள் அவரது முயற்சியைப் பாராட்டினர். மகள்களின் கல்விக்காக ஒரு தாய் மேற்கொண்ட இந்த முயற்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது. அவரது வெற்றி பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.

ரமாபாய், தனது மகள்களைப் படிக்க வைப்பதற்காக ஹிங்கோலியில் இருந்து அம்பாஜோகாய்க்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள ஒரு நிறுவனத்தில் சமையல் பணியாளராக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரது ஒரு மகள் பி.எஸ்.சி. படித்து வருகிறார்; மற்றொரு மகள் காவல் துறை பணிக்கான தேர்வுக்குத் தயாராகி வருகிறார். குடும்பச் சூழ்நிலை கடினமாக இருந்தாலும், மகள்களின் கல்வியை நிறுத்தாமல் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். அந்த நோக்கத்துடன் ஓடி வென்ற ரூ.3 ஆயிரம் பரிசு, அவரது முயற்சிக்கு கிடைத்த சிறிய வெற்றியாக மட்டுமல்லாமல், தாயின் மன உறுதியை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.