இந்திய அரசியலையும் நீதித்துறையையும் ஒரு காலத்தில் உலுக்கிய சம்பவத்தில் பிரபல மோசடி கும்பல் தலைவன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது மற்றொரு திடுக்கிடும் வழக்கில் சிக்கி கம்பி எண்ணிக்கொண்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது தனிச்செயலாளர் போலக் குரலை மாற்றிப் பேசி, பெண் நீதிபதி ஒருவரை மிரட்டி ஜாமீன் பெற முயன்ற வழக்கில் அவருக்குத் தீஸ் ஹசாரி நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி காட்டியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், லஞ்ச வழக்கில் சிக்கி காவல்துறை காவலில் இருந்தான் சுகேஷ் சந்திரசேகர். டெல்லி சிறப்பு நீதிபதி சௌத்ரி என்பவரின் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது காவல் காவலில் இருந்த சுகேஷ், அங்குள்ள காவலர் மஞ்சித் என்பவரின் செல்போனை ரகசியமாகப் பயன்படுத்தி நீதிபதியின் அலுவலக மற்றும் தனிப்பட்ட எண்களுக்குத் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டுள்ளான்.
தொலைபேசியில் பேசிய நபர், முதலில் தன்னை உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தனிச்செயலாளர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்பிறகு மற்றொருவன் போனில் பேசி, தான் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கொலீஜியத்தின் உத்தரவின்பேரில் பேசுவதாகவும் நாடகமாடியுள்ளான். உடனே சுகேஷ் சந்திரசேகருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளான்.
மிரட்டல் குரலில் பேசிய அந்த நபரின் பேச்சு மீது சந்தேகம் அடைந்த நீதிபதி பூனம் சௌத்ரி, உடனடியாக உச்சநீதிமன்றத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தார். அப்போதுதான், அப்படிப்பட்ட எந்தவொரு அதிகாரப்பூர்வ அழைப்பும் விடுக்கப்படவில்லை என்பதும், அந்தப் பெயரில் யாரும் அங்குப் பணிபுரியவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் ஹர்ஷிதா மிஸ்ரா, சுகேஷின் இந்தச் செயல் இந்திய நீதித்துறையின் மீதான நேரடித் தாக்குதல் என்று கடுமையாகக் கண்டித்தார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைகள் ஒவ்வொன்றாக தொடரும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காவல்துறை காவலில் இருந்துகொண்டு சுகேஷ் எப்படி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினான் என்பது குறித்த முறையான விசாரணை நடத்தாத டெல்லி காவல்துறையின் சுணக்கமான போக்கையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கடுமையாக சாடியுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை பெறுவது குறித்து லஞ்சம் கொடுத்த வழக்கிலும் இவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
