கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தேசிய விருது பெற்ற நடிகை மான்சி பரேக், பாதுகாப்பாக மும்பை திரும்பியுள்ளார். நேபாளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்தது ஒரு போரில் வெற்றி பெற்றது போல் இருந்தது என அவர் தனது திகிலூட்டும் அனுபவத்தை விவரித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் கனமழை காரணமாகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். மான்சி பரேக் தங்கியிருந்த கட்டிடம் மற்றும் கிராமமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுச் சேறாக மாறியது.

வெள்ளப்பெருக்கின் போது தொலைபேசி, இணையம், மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்ததாக அவர் கூறியுள்ளார். தங்கும் விடுதியைச் சுற்றி நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், 15 நிமிடப் பயணத்திற்கு 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதியாக, உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் காத்மாண்டு விமான நிலையம் திறக்கப்பட்ட போது, ஒரு வழியாக விமான டிக்கெட் பெற்று அவர் பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்ந்தார். மும்பை விமான நிலையத்தில் காலடி எடுத்து வைத்த பிறகே தனக்கு உயிர் மூச்சு திரும்பியதாக மான்சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போதேகோஷி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், நேபாள அரசு மக்களுக்குத் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகிறது.