டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில், படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை டெல்லி காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஆவார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமி, நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.

அப்போது மழை பெய்யத் தொடங்கியதாலும் இரவு நேரமாகிவிட்டதாலும், வழியில் உள்ள ஒரு சந்திப்பில் இறங்கி பேருந்திற்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த காலியான படுக்கை வசதி கொண்ட பேருந்தை நிறுத்தி ஏறியுள்ளார்.

பேருந்தின் ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர், சிறுமியை நொய்டாவில் இறக்கிவிடுவதாகக் கூறிப் பேருந்தில் ஏற்றியுள்ளனர். ஆனால், பேருந்து சிறிது தூரம் சென்றதும் இருவரும் சேர்ந்து அச்சிறுமியை மிரட்டி பாலியல் சித்திரவதை செய்துள்ளனர்.

பின்னர் காஷ்மீரி கேட் அருகிலுள்ள சுற்றுச்சாலையில் இறக்கிவிடப்பட்ட சிறுமி, அச்சத்துடன் காஷ்மீரி கேட் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.