திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போலி செயலிகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி இந்த ஏமாற்று வேலை நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய முக்கிய ஏஜெண்டுகளான ரமேஷ், அவரது மனைவி அனிதா மற்றும் விஜய் ஆகிய 3 பேரை போலீசார் உடனடியாகக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட ஏஜென்ட் ரமேஷின் வீட்டுச் செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பணத்தைக் கைப்பற்றும் ஆசையில் அவரது வீட்டைச் சுற்றி பெருமளவில் கூடினர்.
அங்குச் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்க நத்தம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரின் முன்னிலையிலும் காவல்துறையினர் அந்தச் செப்டிக் டேங்கைத் தோண்டிப் பரிசோதனை செய்து பார்த்தனர்.
ஆனால், செப்டிக் டேங்கிற்குள் கல் மற்றும் மணல் மட்டுமே இருந்தது; பணம் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஆசையோடு திரண்டு வந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மோசடித் தொகை ரூ.1,000 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.
