உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை நதிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், திரிவேணி சங்கமம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற பெரிய அனுமன் கோயிலுக்குள் கங்கை நீர் புகுந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயிலின் கருவறைக்குள் நீர் சென்றதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால், சயன நிலையில் இருக்கும் அனுமன் சிலையின் பாதங்கள் நீரில் மூழ்கின. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

கோயில் அர்ச்சகர்களின் தகவலின்படி, அதிகாலை சுமார் 3.45 மணியளவில் கங்கை நீர் கோயிலின் உள் அறையை அடைந்தது. இதையடுத்து, அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தி, வேத மந்திரங்கள் முழங்க கங்கை நீரை வரவேற்றனர். தொடர்ந்து சிறப்பு ஆரத்தி மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பாரம்பரிய நடைமுறையின்படி அனுமன் சுவாமி சயன நிலையில் இருப்பதாகக் கருதி, கோயிலின் பிரதான வாயில்கள் பக்தர்களுக்காக மூடப்பட்டன.

 

ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலத்தில் கங்கை நீர்மட்டம் உயரும்போது இதுபோன்று கோயிலுக்குள் நதி நீர் புகுவது நடைபெறுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அவர்கள் வெறும் வெள்ளப்பெருக்காக மட்டும் பார்க்காமல், கங்கை தாயே அனுமன் சுவாமிக்கு ஆண்டுதோறும் செய்யும் புனித நீராடல் என நம்புகின்றனர். கடந்த ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் மேல்பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால் கங்கை, யமுனை ஆகிய இரு நதிகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, திரிவேணி சங்கமம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. பிரயாக்ராஜில் வெள்ள நிவாரண மையங்கள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இரு நதிகளின் நீர்மட்டம் தற்போது அபாய அளவான 84.73 மீட்டருக்கு கீழே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயிலின் உள் வளாகத்துக்குள் பக்தர்கள் செல்வதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்மட்டம் குறைந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.