2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஆண்டுதோறும் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 கோடியை எட்டக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது உலகளவில் ஆண்டுதோறும் 2.06 கோடி பேருக்குப் புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.
மேலும், உலகம் முழுவதும் தினமும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும், தற்போது ஆண்டுக்குச் சுமார் 1 கோடி உயிரிழப்புகள் பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய நோய்களுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோயாகப் புற்றுநோய் உள்ளது.
புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 40 சதவீத பாதிப்புகள் புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் ஹெபடைட்டிஸ் போன்ற தடுக்கக்கூடிய காரணிகளினாலேயே ஏற்படுகின்றன.
குறைந்த வருமானம் கொண்ட ஏழை நாடுகளில் புற்றுநோயைக் கண்டறிவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் போதுமான வசதிகள் இல்லாமல் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
