நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, அந்நாட்டின் வங்கி அமைப்பையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் பாட்டேகோஷி ஆற்றின் வெள்ளத்தால் 11 வணிக வங்கிகளின் 17 கிளைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிளைகளுடன் தொடர்புடைய கணக்குகளில் சுமார் 4.35 பில்லியன் நேபாள ரூபாய், அதாவது ரூ.435 கோடி அளவிலான டெபாசிட் இருந்ததாகவும், சுமார் 2.42 பில்லியன் நேபாள ரூபாய் கடனாக வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கிளைகளில் 73,275 டெபாசிட் கணக்குகளும் 2,125 கடன் கணக்குகளும் இருந்துள்ளன.
ஆனால் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். ரூ.435 கோடி முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்று அர்த்தமில்லை. இது அந்த கிளைகளுடன் தொடர்புடைய கணக்குகளில் இருந்த மொத்த டெபாசிட் தொகையாகும். வெள்ளத்தால் கிளைகள் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், அந்த டெபாசிட் தொகையின் நிலை குறித்து முழுமையான மதிப்பீடு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வெள்ளத்தில் ஒரு வங்கி பெட்டகம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் இருந்த ரூ.92.68 லட்சம் பின்னர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பணத்தை எடுக்க முயன்றதாகக் கூறி 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், இந்த பேரழிவு வங்கித் துறைக்கும் எவ்வளவு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவருகிறது.
