ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சிதாபுரா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய தேர்வு மையங்களில், மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான நீட் (NEET-PG 2026) தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் தேர்வு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கணினிகளுக்குச் செல்லும் மின் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டதால், தேர்வு எழுதிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் தேர்வர்கள் தங்களது பதில்களைப் பதிவு செய்ய முடியாமல் பெரும் அவதிக்கும் சிரமத்திற்கும் ஆளாகினர்.

​நீண்ட நேரமாகக் மின் விநியோகம் சீரமைக்கப்படாததாலும், மாற்று மின் ஏற்பாடுகள் சரிவர இயங்காததாலும் ஆத்திரமடைந்த தேர்வர்களும் அவர்களின் பெற்றோர்களும் தேர்வு மையத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தேர்வு மையத்தில் இத்தகைய அலட்சியப்போக்கு நிலவியதாகக் கூறி, மத்திய அரசு மற்றும் தேர்வு வாரியத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

​இந்த எதிர்பாராத தொழில் நுட்பக் கோளாறு மற்றும் மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS), பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி மறுதேர்வு (Re-exam) நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மறுதேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் மற்றும் திருத்தப்பட்ட தேர்வு மைய விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி மறுதேர்வுக்குத் தயாராகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.