செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் பகுதியில் பழமை வாய்ந்த மலைமண்டல பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சிறிய மலை போன்ற மேடான பகுதியில் அமைந்துள்ளதால் இத்தல இறைவன் ‘மலைமண்டல பெருமாள்’ என்றும் ‘கிரி வரதராஜப் பெருமாள்’ என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பெருந்தேவி என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ‘தென் பத்ரி’ என்று போற்றப்படும் இக்கோவில், பதினெட்டு சித்தர்கள் வழிபட்ட சிறப்புமிக்க திருத்தலமாகும்.
இக்கோவிலின் கருவறையில் கிரிவரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவியுடன் சுமார் ஆறடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். ஒரு காலை முன்வைத்து கஜேந்திர மோட்சத்திற்குச் செல்லும் நிலையில் உள்ள இவர், ஏவிய நிலையில் சக்கரத்தைக் கையில் ஏந்தியுள்ளார். இத்தலத்தில் தாயார் மூன்று வடிவங்களில் காட்சியளிப்பதும், பஞ்சலோக ஆஞ்சநேயர் கையில் மலர் ஏந்தி நிற்பதும் வேறு எங்கும் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கருட பகவான், உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாக அணிந்து ‘அஷ்ட நாக கருடனாக’க் காட்சியளிக்கிறார். கையில் தாமரை மலரை ஏந்தியிருக்கும் இவரைத் தரிசித்தால் சகலவிதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இக்கோவிலில் கருடனின் தலையும் பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது, கருடனிடம் வைக்கும் பிரார்த்தனை நேரடியாகப் பெருமாளின் பாதங்களைச் சென்றடைவதைக் குறிக்கிறது.
இங்குள்ள அஷ்ட நாக கருடாழ்வாருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீல நிறமாக மாறுவது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது தோஷங்கள் நீங்கி விருப்பங்கள் நிறைவேற, இவருக்கு நெய் தீபமேற்றி அமிர்த கலசக் கொழுக்கட்டையை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுகின்றனர். மேலும், இங்குள்ள சிறப்புமிக்க விளக்கில் நெய் ஊற்றிப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை – கல்பாக்கம் பாதையில் சதுரங்கப்பட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோவில், ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராமேஸ்வரம் கடலில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே பலனை இக்கோவிலின் அருகிலுள்ள ‘அர்த்த சேது’ கடற்கரையில் நீராடுவதன் மூலம் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.
