ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரக்ஷா பந்தன் பண்டிகையன்று அண்ணன்-தம்பிகளுக்குப் பதிலாக மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டிப் பாதுகாக்கும் வித்தியாசமான வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மனிதர்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படையாக விளங்கும் மரங்களைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கிராம மக்கள் இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர்.

வனப் பாதுகாவலர் சஞ்சீவ் குமார் என்பவரால் 2004-ஆம் ஆண்டு தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இந்த இயக்கம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், தற்போது மாநிலம் முழுவதும் பரவி சுமார் 12,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சென்றடைந்துள்ளது.

ரக்ஷா பந்தன் நாளில் சகோதரர்கள் சகோதரிகளைப் பாதுகாப்பதாக உறுதியளிப்பது போல, கிராம மக்கள் மரங்களுக்கு ராக்கி கட்டி அவற்றைக் கோடாரிகளிலிருந்தும் ஆக்கிரமிப்புகளிலிருந்தும் பாதுகாப்பதாகச் சூளுரைக்கிறார்கள். ஒரு மாத காலம் நடைபெறும் இந்த சிறப்புப் பிரச்சாரத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மரங்களுக்கு ராக்கி கட்டப்பட்டு வருகிறது.

பொதுவாக மரங்களை நடுவதோடு விட்டுவிடாமல், அவற்றை வளர்த்துப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும். மரங்கள் பல்லுயிர் பெருக்கம், நிலத்தடி நீர் உயர்வு மற்றும் விவசாயத்திற்கு முக்கியப் பங்காற்றுவதால், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அரணாக இந்த முயற்சி மாறியுள்ளது.

இந்த மர பாதுகாப்பு இயக்கத்தின் விளைவாகக் கடந்த இருபது ஆண்டுகளில் ஜார்க்கண்டின் வனப்பரப்பு சுமார் 1,128 சதுர கிலோமீட்டர் வரை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இயற்கையோடு இணைந்து வாழும் இந்த எளிய முறை, எதிர்கால சந்ததிக்கு பசுமையான சூழலை உருவாக்க மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.