நெதர்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகத்தைப் போன்ற வடிவம் கொண்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறங்களில் இருந்த அந்த மாத்திரைகள், அந்நாட்டின் போதைப்பொருள் தகவல் மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் பரிசோதனைக்காக வழங்கப்பட்டன. பரிசோதனையில் அவற்றில் பிஎம்எம்ஏ என்ற ஆபத்தான ரசாயனம் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த மாத்திரைகள் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிஎம்எம்ஏ என்பது எம்டிஎம்ஏ போன்ற போதைப்பொருட்களுடன் ஒத்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு ரசாயனப் பொருளாகும். ஆனால், இதன் தாக்கம் உடனடியாக தெரியாமல் தாமதமாக ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லை என்று நினைத்து ஒருவர் மீண்டும் எடுத்துக்கொள்ளும் அபாயம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அளவுக்கு அதிகமான உட்கொள்ளல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

டிரம்பின் முகம் மற்றும் அவரது தனித்துவமான சிகை அலங்காரத்தைப் போன்ற வடிவமைப்புடன் இந்த மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்திரையின் மற்றொரு பக்கத்தில் ‘Trump’ என்ற பெயரும், நெதர்லாந்தைக் குறிக்கும் ‘NL’ என்ற எழுத்துகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் இதற்கு முன்பும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் இருந்த வேதிப்பொருள் ஒன்றாக இருந்தது என்று கூற முடியாது.

மாத்திரையின் வடிவம் அல்லது வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அதில் என்ன இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, எம்டிஎம்ஏ என கருதப்பட்ட சில மாத்திரைகளில் பிஎம்எம்ஏ போன்ற ஆபத்தான பொருட்கள் இருந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நெதர்லாந்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பிஎம்எம்ஏ அதிக அளவில் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போதைப்பொருட்களின் பெயர் அல்லது தோற்றத்தை நம்பி அவற்றின் தன்மையை முடிவு செய்யக்கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.