இத்தாலியின் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் வேகமாகப் பெருகியுள்ள ப்ளூ கிராப்கள் கடல் சூழலுக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன. குறிப்பாக கிளாம், மஸ்ஸல் உள்ளிட்ட கடல் உணவு வளங்களை இவை அதிக அளவில் பாதிப்பதுடன், மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆக்கிரமிப்பு உயிரினத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிய வழிகளை விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர்.
இதற்கான முயற்சியாக இத்தாலியின் எமிலியா-ரோமாஞா பிராந்திய நிர்வாகமும் போலோக்னா பல்கலைக்கழகமும் இணைந்து ‘ஆக்டோ-ப்ளூ’ என்ற பரிசோதனைத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிசெனாட்டிகோ மற்றும் ரிச்சியோனே கடல் பகுதிகளில் சுமார் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குட்டிகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த ஆக்டோபஸ்கள் அப்பகுதியிலேயே இயற்கையாக காணப்படும் இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ கிராப்களை கட்டுப்படுத்த ஆக்டோபஸ்களை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம், அவை இந்த நண்டுகளின் இயற்கையான வேட்டையாடிகள் என்பதுதான். முழுமையாக வளர்ந்த ஆக்டோபஸ் ஒரு நாளில் பல ப்ளூ கிராப்களை வேட்டையாடும் திறன் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண் நண்டுகளை கட்டுப்படுத்த முடிந்தால், அவை வெளியிடக்கூடிய லட்சக்கணக்கான முட்டைகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எனினும், இந்த முயற்சி உடனடியாக ப்ளூ கிராப்களை அழித்துவிடும் என்ற உத்தரவாதம் இல்லை. ஆக்டோபஸ் குட்டிகளில் பெரும்பாலானவை வளர்ச்சியடையும் முன்பே உயிரிழக்கும் வாய்ப்பு இருப்பதால், திட்டத்தின் உண்மையான தாக்கம் காலப்போக்கில்தான் தெரியவரும். அதனால் இது ஒரு பரிசோதனை உயிரியல் கட்டுப்பாட்டு முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. கடலில் ஆக்டோபஸ் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், ப்ளூ கிராப்களை பிடிப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளும் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன.
