திருமணச் சந்தையில் வயது என்பது இன்றைக்கு எதை நிர்ணயிக்கிறது? தகுதியான வாழ்க்கைத்துணையைத் தேடும் பயணத்தில், இந்த வயது வரம்பு ஒரு பாதுகாப்பான எல்லையா அல்லது வாய்ப்புகளைத் தகர்க்கும் முட்டுக் கட்டையா? சமூக வலைத்தளங்களில் தற்போது இக்கேள்விதான் அனலைக் கிளப்பி வருகிறது.

பிரபல மேட்ச்மேக்கிங் நிறுவனரான ஓந்த்ரிலா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு உண்மைச் சம்பவம், இணையத்தில் இரண்டு துருவங்களாகப் பிரிந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தன் ஆறு வருட அனுபவத்தைக் கொண்டு அவர் சொன்ன அந்தச் சம்பவம் சுவாரசியமானது மட்டுமல்ல, சிந்திக்க வைக்கக்கூடியதும்கூட.

ஓந்த்ரிலாவிடம் வரன் தேடி வந்த அந்தப் பெண்ணுக்கு வயது 40. ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் திறமையான பெண். ஆனால், வரன் பார்க்கும் விசயத்தில் அவர் வைக்கும் நிபந்தனைதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. தனக்கு வரப்போகும் கணவர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பதில் அவர் அத்தனை உறுதியாக இருக்கிறாராம்.

சமீபத்தில் 44 வயதுடைய ஒரு நல்ல வரன் இவருக்கு அமர்ந்துள்ளது. ஆனால், அவரோ, “அவர் எனக்கு மிகவும் வயதானவர்; எங்களுக்கிடையே தலைமுறை இடைவெளி (Generation Gap) இருக்கும்” எனக் கூறி அந்த வரானை உடனடியாக நிராகரித்துவிட்டாராம்!

இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான, அதே சமயம் சிக்கலான முரண்பாட்டை ஓந்த்ரிலா சுட்டிக்காட்டுகிறார். 38 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆண்கள், திருமணச் சந்தையில் பெரும்பாலும் 35 வயதிற்குட்பட்ட இளம்பெண்களையே தங்களுக்குத் துணையாகத் தேடுகிறார்கள். அதே நேரத்தில், 35 வயதிற்குட்பட்ட பெண்களோ தங்களை விட மிகவும் மூத்த வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.

இதன் விளைவு என்ன? ஒவ்வொருவரும் தனக்குப்பிடித்த ஒருவரைத் தேடி விரல் நீட்டுகிறார்கள்; ஆனால் அவர்கள் தேடும் நபர் இவர்களைத் தேடுவதில்லை. இது ஒரு வட்டத்திற்குள் ஒருவரையொருவர் துரத்தும் முடிவற்ற கதையாகவே நீடிக்கிறது. வாழ்க்கை முறை, ஆரோக்கியம், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஆகியவற்றுக்கு வயது முக்கியமானதாக இருக்கலாம்; ஆனால் இருவருக்கிடையே புரிந்துணர்வு இருக்க வயது மட்டுமே தகுதியாகிவிடாது என்பதே நிதர்சனம்.

இந்த விவகாரம் வெளியானதும் நெட்டிசன்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். பெண்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள், “ஆண்கள் தங்களுக்குப் பிடித்ததைத் தேடும்போது அதை ‘விருப்பம்’ என்கிறார்கள்; ஆனால் பெண்கள் தங்களைப் போலவே வெற்றிகரமான, வயதில் சிறிய துணையைத் தேடினால் மட்டும் அதை ‘பிடிவாதம்’ என்று முத்திரை குத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும், “இன்றைய பெண்கள் பொருளாதாரத்தில் தற்சார்பு அடைந்துவிட்டனர். தங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் வாழ்ந்து சமரசம் செய்து கொள்வதை விட, தனித்து வாழ்வதே மேல் என நினைக்கிறார்கள்; இதில் எந்தத் தவறும் இல்லை” என்றும் வாதாடி வருகின்றனர்.

மேலும் வயது என்பது ஒரு வெறும் எண்கூடம்தானே தவிர, அது ஒருவரின் தகுதியை முழுமையாகத் தீர்மானித்துவிடாது என்ற விவாதத்துடன் இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களின் ட்ரெண்டிங் டாப்பிக்காக மாறி வருகிறது.