தலைநகர் தில்லியின் மேற்கு மாவட்டமான திலக் நகர் பகுதியில், இளம் மாடல் அழகி ஒருவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள ஜிம் பயிற்சியாளரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதாவது 21 வயதான முஸ்கான் என்பர் படித்து வந்த நிலையில் பகுதி நேரமாக மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று முஸ்கானின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததால், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இம்ரான் என்ற ஜிம் பயிற்சியாளர், முஸ்கானின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இம்ரான், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முஸ்கானைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முஸ்கானைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து முஸ்கானின் நெருங்கிய நண்பர் சில திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இம்ரான் என்பவன் முஸ்கான் உடற்பயிற்சி செய்த ஜிம்மில் பயிற்சியாளராக வேலை செய்து வந்துள்ளான். அந்த முறையில்தான் அவனுடன் முஸ்கானுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இம்ரான் ஒரு ‘சைக்கோ’ போன்று நடந்து கொண்டதாகவும், முஸ்கானை எப்பொழுதும் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. முஸ்கானைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அவன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான். அவனிடமிருந்து விலகி இருக்க முஸ்கான் முயன்றபோதெல்லாம், அவன் ஆவேசமாக நடந்து கொண்டு தொல்லை கொடுத்துள்ளான். இந்த ஒருதலைக் காதல் வெறியில்தான் அவன் இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மாலை 7 மணியளவில் முஸ்கானின் சகோதரி முஸ்கானின் நண்பருக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த முஸ்கானை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். துணை காவல் ஆணையர் அபிஷேக் குப்தா தலைமையிலான தனிப்படையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள கொடூரக் கொலைகாரன் இம்ரானை விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
