உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், பிரபல ஹரியானா பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் மர்ம நபர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்மிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது நிகழ்ந்த இந்தத் தாக்குதலின் பின்னணியில் கேங்வார் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது வழக்கம்போல் கடந்த புதன்கிழமை மாலை ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்துள்ளார் அங்கித் பாலியன். மாலை சுமார் 6:45 மணியளவில் அவர் ஜிம்மிலிருந்து வெளியே வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக் கும்பல் அவரை வழிமறித்துத் தாக்கியது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் பாய்ந்த தோட்டாக்கள், அங்கித் மீது சரமாரியாகப் பாய்ந்தன. இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்ததாகக் கூறப்படும் நிலையில், பலத்த காயமடைந்து சாலையில் சரிந்து விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலையைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒரு பதிவு காட்டுத் தீயாய் பரவி வருகிறது. ‘போலு ஷாப்பூர்யா’ என்ற பெயரில் உள்ள கணக்கில், அங்கித் பாலியன் கொலைக்குத் தாமே பொறுப்பு என்று கூறி ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட அங்கித், கோகி கேங் தலைவருடன் தொடர்புடைய ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும், அதனாலேயே அவர் குறிவைக்கப்பட்டதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கித் பாலியன் தனது பாடல்களில் கேங்வார், குற்ற உலகச் சம்பவங்கள் மற்றும் ஆயுதங்களை மையமாகக் கொண்டு பல சர்ச்சைக்குரிய மற்றும் பிரபலமான பாடல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக அவர் வெளியிட்ட “நீதிமன்றத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்வோம்” என்ற பாடல் யூடியூப்பில் 5.4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளத்தில் பரவி வரும் கொலையுரிமைக் கோரிக்கையின் உண்மைத் தன்மை குறித்தும், அங்கித்தின் அன்றாட நகர்வுகள் குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், அவர் விரைவில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்ததாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் முழுமையாக ஆய்வு செய்து வருவதோடு, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
