பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் பெண் ஒருவர், தன் வகுப்பில் பயின்ற மாணவன் ஒருவனால் நரகம் போன்ற இன்னல்களைச் சந்தித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தொல்லை, ஆசிட் வீச்சு மிரட்டல் மற்றும் அந்தரங்கப் படங்களை இணையத்தில் கசியவிட்டது என அந்த மாணவன் செய்த சில்மிஷம் எல்லாவற்றையும் தாண்டியுள்ளது.
அதாவது மொஹாலி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் அந்தப் பெண்மணியின் வகுப்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு ரஜித் என்ற மாணவன் பயின்று வந்துள்ளான். ஆரம்பத்தில் வகுப்பில் சாதாரணமாக இருந்த அந்த மாணவன், நாளாக நாளாக அந்தப் பேராசிரியரிடம் ஒருதலைக் காதலை வளர்த்துக் கொண்டுள்ளான். தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது லவ் லெட்டர்களைக் கொடுத்துத் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
பின்னர் மாணவனின் துறை மாற்றப்பட்ட போதிலும், அவனது தொல்லைகள் நின்றபாடில்லை. பேராசிரியரின் ஸ்டாஃப் ரூம் சுற்றுவட்டாரத்திலேயே சுற்றி வந்தவன், கடந்த பிப்ரவரி 12, 2026 அன்று பேராசிரியரின் மேஜை மீது ஒரு காதல் கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளான். சிசிடிவி கேமரா மூலம் அவன் தான் அந்தச் செயலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதும், பேராசிரியை உடனடியாக பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விசாரணையின் போது, தன் தவறை ஒப்புக்கொண்ட மாணவன் மன்னிப்பும் கோரினான்.
மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும், மாணவனின் மனநிலை மாறவில்லை. பேராசிரியரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்ந்து மெசேஜ் செய்து பேசும்படி வற்புறுத்தியுள்ளான். இதனால் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அவனது பெற்றோர்கள் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அனைவர் முன்னிலையிலும் அந்த மாணவன், தான் பேராசிரியரை விரும்புவதாகவும் அவர்களை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் திமிராகப் பேசியது அனைவரையும் அதிர வைத்தது.
இதையடுத்து, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழக நிர்வாகம், பிப்ரவரி 21-ஆம் தேதியன்று அந்த மாணவனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. தன் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்ட மாணவன், தனது தாயுடன் பேராசிரியரைத் தேடிச் சென்று காலில் விழுந்து கதறி அழுதுள்ளான். தான் தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு மன்றாடியுள்ளான். ஆனால், பேராசிரியை அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், அங்கிருந்து கிளம்பும் போது “எந்த நேரத்திலும் உன் முகத்தில் ஆசிட் ஊற்றி உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன்” என்று பகிரங்கமாக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளான்.
மிரட்டலோடு நில்லாமல், தன் கைவரிசையைக் காட்டிய அந்த மாணவன் அடுத்து ஒரு பெரிய சதித் திட்டத்தைத் தீட்டினான். பல்கலைக்கழகத்தின் பெயரில் ஒரு போலியான மின்னஞ்சலை உருவாக்கிய அவன், சக பேராசிரியர்களிடம் அவர்களின் ஐடி மற்றும் பாஸ்வேர்டைக் கேட்டுப் பெற்றுள்ளான். பேராசிரியர்களில் ஒருவரும் அதை நம்பி தனது விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த ரகசிய கணக்கைப் பயன்படுத்தி, பல்கலைக்கழக மாணவர்களுக்கே பேராசிரியருக்கு எதிரான அவதூறுச் செய்திகளையும், அவரது மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பரப்பத் தொடங்கினான். கடந்த ஆகஸ்ட் 22 அன்று, பேராசிரியரின் பெயரிலேயே போலி ராஜினாமா கடிதத்துடன் கூடிய அந்தரங்கப் படங்களை மாணவர்களுக்கும் சக பேராசிரியர்களுக்கும் அனுப்பிவிட்டுத் தலைமறைவாகினான்.
தான் பட்ட அவமானங்களுக்கும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்கும் எதிராகப் பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் உடனடியாக காவல் நிலையத்தில் முறையிட்டார். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த மாணவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது டிஜிட்டல் தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மாணவனின் இந்தப் பேராபத்தான செயல் அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பையும், பாதுகாப்புக் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
