திருமண உறவு என்பது மனிதர்களுக்கு இடையேயான மிக அழகான உறவுகளில் ஒன்று; ஆனால் கணவன், மனைவி இடையேயான பிரச்னைகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால் அதே உறவு மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமண வாழ்க்கை நம்பிக்கை, புரிதல் மற்றும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதன் அடிப்படையில் வலுப்பெறுகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து பெரிதாகும்போது குடும்ப வாழ்க்கையே பாதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காண்பது மிகவும் முக்கியம் என்றும் நீதிபதி விமல் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மனைவியை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நஃபே சிங் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. ஆனால் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்குத் தேவையான வலுவான ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பாக கொலை முயற்சிக்கான நோக்கம் மற்றும் அதற்கான அறிவு இருந்தது என்பதை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்கி உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் நஃபே சிங் மற்றும் அவரது மனைவிக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருமணமான ஓராண்டுக்குள் இருவருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், தனியாக வீடு அமைத்து வாழ்வது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மனைவி, தனது கணவருடன் தனியாக வசிக்க விரும்பியதாகவும், கணவரின் விதவை தாயை உடன் வைத்துக்கொள்வதில் பிரச்னை ஏற்பட்டதாகவும் நஃபே சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த குடும்பத் தகராறு தொடர்பாகவே தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
கணவன், மனைவி இடையேயான பிரச்னைகள் ஒரு கட்டத்தைத் தாண்டும்போது அதன் தாக்கம் அந்த இருவருடன் மட்டும் நின்றுவிடாது; குடும்பத்தையும் இறுதியில் சமூகத்தையும் பாதிக்கும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நம்பிக்கையுடன் இருந்த உறவு தொடர்ந்து மோதல் நிறைந்ததாக மாறும்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காலம் பல பிரச்னைகளை ஆற்றக்கூடியதாக இருந்தாலும், உறவுகளில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதைத் தொடர்ந்து தாமதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை ஆரம்பத்திலேயே பேசி தீர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.
