சிங்கப்பூர் நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அரசு அதிரடிச் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. அந்நாட்டில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டி வரும் சூழலில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகைச் சமநிலையைப் பேணவும், தம்பதிகளைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும் சிங்கப்பூர் அரசு புதிய நிதியுதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காகப் பெற்றோருக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், குழந்தை பிறந்தது முதல் 17 வயதை எட்டும் வரை கட்டம் கட்டமாக ரூ.52 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை நேரடியாகப் பெற்றோருக்கு நிதி உதவியாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பராமரிப்பு, வளர்ப்பு மற்றும் கல்விக்கான செலவினங்களை எளிதாகச் சமாளிக்கவும், பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கவும் இந்த நிதி உதவி பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த ஊக்குவிப்புத் திட்டம் பிறப்பு விகிதத்தை மீண்டும் உயர்த்த உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
