பிரேசிலின் முன்னணி கால்பந்து நட்சத்திரமான நெய்மர் ஜூனியர், போட்டி ஒன்றின் போது காட்டிய நெகிழ்ச்சியான செயலால் தற்போது இணையத்தில் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். சாண்டோஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், போட்டிக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்த ஒரு சம்பவத்தால் டிரெண்டாகி வருகிறார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, நெய்மருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சிறிய பெண் குழந்தை திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதது. இதைத் தற்செயலாகக் கவனித்த நெய்மர், அந்தச் சிறுமியை அன்போடு கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

தேசிய கீதம் முடிவடைந்ததும், நெய்மர் மிகவும் மென்மையாக அந்தச் சிறுமியின் கண்ணீரைத் துடைத்து விட்டார். மைதானத்தில் நடந்த இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தைக் கண்டு நெகிழ்ந்த மற்ற குழந்தைகளும், நெய்மரை நோக்கி ஓடிவந்து அவருடன் அந்த அழகிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெய்மரின் குணத்தையும், குழந்தைகள் மீது அவர் காட்டும் பேரன்பையும் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

O hino acaba… e isso sempre acontece! 🥰 pic.twitter.com/WmsEGKZnni

— Santos FC (@SantosFC) August 23, 2026

“>

கால்பந்து போட்டியைப் பொறுத்தவரை, சாண்டோஸ் மற்றும் மிராசோல் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி 1-1 எனச் சமனில் முடிந்தது. இருப்பினும், இந்த சீசனில் தனது சிறுவயது கிளப்பான சாண்டோஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடியுள்ள நெய்மர், 6 கோல்களையும் 4 அசிஸ்டுகளையும் பதிவு செய்து மிகச்சிறப்பான ஃபார்மில் உள்ளார்.