மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் ஜவா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததாலும், வெள்ளத்தில் ஆற்றுப்பாலம் மூழ்கியதாலும் ஆம்புலன்ஸ் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தங்களது உறவினரின் உடலை டிரம்ஸ்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தற்காலிக மிதவை மூலம் ஆற்றில் கடந்துசெல்லும் பரிதாப நிலை அரங்கேறியுள்ளது.

காவிரி மற்றும் பிற நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கிராமத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி கிராம மக்கள் இரண்டு பெரிய பிளாஸ்டிக் டிரம்ஸ்களை ஒன்றாகக் கட்டி, அதன் மீது உடலை வைத்து ஆபத்தான முறையில் வெள்ள நீரைக் கடந்து சென்றுள்ளனர். இறந்த உடலுக்குக் கூடக் கடைசி நேரத்தில் உரிய மரியாதை கிடைக்காத இந்தச் சம்பவம் கிராமப்புறங்களில் நிலவும் அடிப்படை வசதிகளின் மோசமான நிலையையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தங்களது கிராமத்திற்குச் சாலை வசதி கோரி பலமுறை புகார்கள் அளித்தும் ஊராட்சித் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஊராட்சி மன்ற தலைவர்  தரப்பில் “நாங்கள் எம்.எல்.ஏ.வின் ஆட்கள், அப்படித்தான் வேலை நடக்கும், யாராவது வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன?” என்று அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுபோன்ற அவல நிலை அப்பகுதியில் தொடர்கிறது என்பதற்குச் சான்றாக, கடந்த ஜூலை 4-ஆம் தேதியன்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்போது உடல்நிலை சரியில்லாத ஒரு பழங்குடிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முறையான சாலையோ ஆம்புலன்ஸ் வசதியோ இல்லாததால், கிராம மக்கள் அவரை ஒரு கட்டிலில் படுக்க வைத்துச் சேறும் சகதியுமான பாதையில் சுமந்து சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.