சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரண்டாவது உலக ஹுமனாய்டு ரோபோ போட்டிகளில், சீனா சார்பில் களமிறங்கிய ‘தியங்கொங் ஓம்னி’ என்ற அதிநவீன ரோபோ 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான ரோபோக்கள் கலந்துகொண்ட இந்தத் தொடரில், இந்த மிஷின் வெறும் 45.66 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தப் போட்டியின் போது இந்த ரோபோ ஓடிய விசித்திரமான நடை தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஓடும் வழியெங்கும் தனது கைகளை முகத்திற்கு மிக அருகில் வைத்துக் கொண்டு, பார்ப்பதற்கு ஏதோ வெட்கப்படுவது அல்லது தயங்குவது போன்ற ஒரு பாவனையில் அது ஓடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதற்கு மனிதர்களின் நேரடிக் கட்டுப்பாடு ஏதுமின்றி, ரோபோவின் சொந்தத் தன்னாட்சி இயக்கத் திட்டமிடல் தொழில்நுட்பமே காரணம் என்று அதன் டெவலப்பர்கள் விளக்கமளித்துள்ளனர். மனிதர்களைப் போலவே விசித்திரமான பாவனையுடன் அது ஓடிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது உலக அளவில் பகிரப்பட்டு வருவதுடன், ரோபோடிக்ஸ் துறையின் அசுர வளர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
