நேபாள பிரதமர் பாலேந்திரா ‘பாலென்’ ஷா பதவியேற்று 150 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு ஆரம்பத்தில் இருந்த ஆதரவு தற்போது குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களின் எதிர்பார்ப்பையும் பழைய அரசியல் அமைப்புக்கு எதிரான மனநிலையையும் அடிப்படையாகக் கொண்டு அவர் ஆட்சிக்கு வந்தார். கடந்த மார்ச் 27-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பாலென் ஷா, இதற்கு முன்பு காத்மாண்டு மேயராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நிர்வாகத் திறன், நாடாளுமன்ற செயல்பாடு மற்றும் அரசியல் அணுகுமுறை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட அவரது அரசியல் பிம்பம் 150 நாட்களிலேயே சவாலை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுடனான எல்லை மற்றும் வர்த்தக விவகாரங்களும் பாலென் ஷா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு வரும் பொருள்களுக்கு சுங்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டபோது, மருந்துகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக இந்திய சந்தையை நம்பியிருந்த மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எதிர்ப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. இதனுடன் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சில முடிவுகளும் விமர்சனத்துக்கு உள்ளாகின. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் தூதர்களையும் பாலென் ஷா சமீபத்தில் தனித்தனியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

உள்நாட்டிலும் அவரது அரசுக்கு பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. காத்மாண்டுவில் வாடகை வாகன ஓட்டுநர் கணேஷ் நேபாளியின் மரணத்தைத் தொடர்ந்து இளைஞர்களிடையே கோபம் அதிகரித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், நிலமற்றவர்கள் மற்றும் முறைசாரா குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே நேபாளத்தின் தெற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் மோதல்களில் 3 பேர் உயிரிழந்த சம்பவமும் அரசுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளுக்கு இடையே இடைவெளி உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாலென் ஷாவுக்கு எதிராக எழுந்துள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று நாடாளுமன்றத்துடனான அவரது தொடர்பு குறித்ததாகும். 39 நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் 5 முறை மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது கட்சியின் முக்கியக் குழுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கட்சி மற்றும் நாடாளுமன்றத்துடனான அவரது உறவு குறித்து விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. மாற்றத்தை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த பாலென் ஷா, இனி மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவதுடன் அரசை நிலையாக நடத்த வேண்டிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளே இந்த அதிருப்தி தற்காலிகமானதா அல்லது அவரது அரசியல் செல்வாக்கில் ஏற்பட்ட பெரிய மாற்றமா என்பதை தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.