கல்லூரி காலத்து நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்து இறுதியில் ஒரு உயிரைப் பறித்த கோர நிகழ்வு கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது வாணிஸ்ரீ என்பவர் தனது கல்லூரிப் படிப்பை முடித்த இவர், பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்த காலத்தில் அபிஷேக் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த நட்பை காதலாக மாற்ற முயன்ற அபிஷேக், வாணிஸ்ரீயை தீவிரமாகத் தொடரத் தொடங்கியுள்ளார். ஆனால், வாணிஸ்ரீ அவரது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், பழிவாங்கும் நோக்கில் வாணிஸ்ரீயின் தனிப்பட்ட புகைப்படங்களை அவளுக்கே அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். “தான் அழைக்கும்போதெல்லாம் உல்லாசத்திற்கு வர வேண்டும்; இல்லையென்றால் உனது புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உனது பெயரைக் கெடுத்துவிடுவேன்” என்று அவர் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். ஆனாலும், வாணிஸ்ரீ அவரின் மிரட்டலுக்குச் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை.
தொடர்ந்து அபிஷேக் தொல்லை கொடுத்ததாலும், தன் குடும்பத்தின் மானம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தாலும் வாணிஸ்ரீ கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இறுதியில், அனைவரையும் அதிரவைக்கும் வகையில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, அருகில் உள்ள ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வாணிஸ்ரீயின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதிய கடிதத்தை ஆய்வு செய்தபோது, அபிஷேக்கின் பாலியல் மிரட்டல்களும், தொடர் தொல்லைகளும்தான் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பது தெரியவந்தது. தன் குடும்பத்தை மிகவும் நேசிப்பதாகவும், தனது குடும்ப மானத்தைக் காக்கவே இந்த முடிவை எடுப்பதாகவும், அபிஷேக்கிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அந்த உருக்கமான கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள அபிஷேக்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
