தலைநகர் டெல்லியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம், நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்ற காவலர்கள் மீது, ஒரு கும்பல் திட்டமிட்டு வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களின் மீதே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தலைநகரில் குற்றவாளிகளின் துணிச்சல் எந்த அளவுக்குக் கரைபுரண்டு ஓடுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

சம்பவத்தன்று வழக்கம் போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர். அப்போது வாகனத்தைக் பறிமுதல் செய்ய முயன்றபோது, திடீரென திரண்ட கும்பல் ஒன்று காவலர்களின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

கண் எரிச்சலால் துடித்த காவலர்களை, செங்கற்களாலும் தடிகளாலும் கொடூரமாகத் தாக்கி ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு அந்தப் போக்கிரி கும்பல் தப்பியோடியுள்ளது. இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பே, களத்தில் இறங்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் தொடர்புடைய ஒரு சிறுவனை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில், சீருடையில் இருந்த காவலர்கள் மீதே துணிச்சலாக மிளகாய்ப் பொடி தூவித் தாக்குதல் நடத்திய சம்பவம், டெல்லியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.