ஒடிசா மாநிலத்தில் பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக, ஒருவரை கொன்று அவனது தலையைத் துண்டித்துத் தனது பூஜை அறையில் புதைத்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) என்பவரை கடந்த 18-ஆம் தேதி முதல் காணவில்லை எனப் புகாரளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த அவரது உடலை அருகில் உள்ள குளத்திலிருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசாரின் விசாரணையில், சந்தோஷ் கடைசியாகச் சத்ருக்னா சாஹு (40) என்பவருடன் சென்றது தெரியவந்தது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் சந்தோஷைக் கொலை செய்ததாகச் சத்ருக்னா சாஹு ஒப்புக்கொண்டார்.
மேலும், சடலத்தின் தலை எங்கே என்று கேட்டபோது, தான் வசிக்கும் வீட்டின் பூஜை அறையில் அதனைப் புதைத்து வைத்திருப்பதாகக் கூறி திடுக்கிட வைத்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு தன்னைவிட்டுப் பிரிந்துசென்ற தனது மனைவியுடன் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காகத் தனது சாமியாரிடம் தந்திரமாகக் கேட்டுக் கொண்டு, மனிதப் பலி கொடுப்பதைப் போல இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் அந்தப் பூஜை அறையைத் தோண்டி சந்தோஷின் தலையைக் கைப்பற்றியதுடன், கொடூரக் கொலைச் செயலில் ஈடுபட்ட சத்ருக்னா சாஹுவை அதிரடியாகக் கைது செய்தனர். குடும்பத் தகராறு மற்றும் மூடநம்பிக்கையின் அடிப்படையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ஒடிசா மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
