பிரேசில் நாட்டில் காணாமல்போன இளம்பெண் ஒருவர், 5 நாட்களுக்குப் பிறகு வாடகை வீட்டில் கட்டிலில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளார். பிரேசிலின் அகுவாஸ் லிண்டாஸ் டி கொயாஸ் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 24 வயதான எமிலியானி தமரா நூன்ஸ் கார்வால்கோ என்ற பெண் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது திடீரென மாயமானார். அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், எமிலியானியின் முன்னாள் காதலரான ஐல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசா  மீது சந்தேகம் திரும்பியது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், அப்பகுதியில் அவர் சில நாட்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்த ஒரு வீடு குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

 

உடனே அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் வெளிப்பக்கமாக அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தனர். உள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்கவே, சுதாரித்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கே ஒரு அறையில் எமிலியானி கயிறுகள், கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் கொடூரமாகக் கட்டப்பட்டிருந்தார். அவரது வாய் துணியால் கட்டப்பட்டு, முகத்தில் முகமூடியும் மாட்டப்பட்டிருந்தது. போலீசார் அவரை மீட்டபோது அவர் மூச்சுவிடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு அந்தச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவரது உடல்நிலை சீராகி, தற்போது அவர் வீட்டிற்குத் திரும்பி ஓய்வெடுத்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், தலைமறைவாக இருக்க முயன்ற முன்னாள் காதலன் ஐல்டன் ரோட்ரிக்ஸை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ஏற்கனவே அவர்கள் மீது குடும்ப வன்முறைப் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. காதலித்துவிட்டுப் பிரிந்த ஆத்திரத்தில், திட்டமிட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணைக் கொடூரமாகச் சித்ரவதை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.