தலைநகர் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை மொத்தம் 42 நாட்களுக்கு அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் கடுமையான புகைமூட்டம் மற்றும் காற்றுத் தரக் குறைபாட்டைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் மூலம் கட்டிட கட்டுமானங்கள், இடிப்புப் பணிகள் மற்றும் தூசி பரவலை அதிகரிக்கும் ஏனைய தளப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்படும். விதிமுறைகளை மீறிச் செயல்படும் கட்டுமான நிறுவனங்கள் அல்லது உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 500 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கட்டுமானத் தளங்கள் அனைத்திலும் ஏஐ  கேமராக்கள் பொருத்தப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். அத்துடன் ‘டஸ்ட் போர்ட்டல்’  என்ற பிரத்யேக இணையத்தளம் மூலமாகவும் மாசுக் கட்டுப்பாட்டு நிலவரம் உடனுக்குடன் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் டெல்லியின் காற்றுத் தரம் மிகவும் மோசமடைவதைத் தடுக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.