சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் (Byte Dance) மற்றும் அதன் கீழ் இயங்கும் பிரபல குறும்படச் செயலியான டிக்-டாக் (TikTok) ஆகியவை, சிறார்களின் தனிப்பட்ட தரவுகளைச் சட்டவிரோதமாகச் சேகரித்து விளம்பரதாரர்களுக்கு விற்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

​பெற்றோரின் முறையான அனுமதியின்றி குழந்தைகளின் பெயர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட ரகசியத் தரவுகளைச் சேகரித்த டிக்-டாக் நிறுவனம், அதனைப் பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டியதாகக் கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

​இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் தொடுத்த இந்த வழக்கை மேலும் நீட்டிக்காமல் முடிவுக்குக் கொண்டுவர டிக்-டாக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காகத் தண்டனைத் தொகையாக சுமார் ரூ.3,300 கோடி ($400 Million) அபராதத் தொகையைச் செலுத்த பைட் டான்ஸ் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

​உலக அளவில் பல கோடிப் பயனாளர்களைக் கொண்டுள்ள டிக்-டாக் செயலி, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் தரவு ரகசியத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு அபராதம் கட்ட முன்வந்துள்ள இந்தச் சம்பவம், சர்வதேச இணையப் பயனாளிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.