அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம், தங்களின் புத்தம் புதிய கலெக்ஷன் என்று கூறி ஒரு உடையை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியது. அந்த உடையின் புகைப்படத்தைப் பார்த்த இந்தியர்கள் அனைவரும் அப்படியே அதிர்ந்துபோனார்கள். காரணம், அதில் வேறு எந்தப் புதுமையும் இல்லை; அச்சு அசல் நமது பாரம்பரிய உடையான சேலைதான் அது.

இத்தனை ஆண்டுகள் இந்தியப் பெண்கள் உடுத்திவரும் பாரம்பரிய சேலையை, தங்களது சொந்த கற்பனை வடிவமைப்பு போல அந்த நிறுவனம் நாசூக்காகக் காட்டியது ஒருபுறம் இருக்க, அதன் விலைதான் அனைவரையும் உச்சக்கட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 26 ஆயிரம் ரூபாய்க்கு அந்த ஆடை விற்கப்பட்டது. “நம்ம ஊரு கலையை காப்பி  அடித்துவிட்டு, அதற்கு இவ்வளவு விலையா? இது என்னடா அப்பட்டமான பித்தலாட்டமாக இருக்கிறது?” என்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும், உலகளாவிய நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் திரண்டு வந்து அந்த நிறுவனத்தை சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

கலாச்சார அடையாளங்களை மறைத்துவிட்டு, அதற்கு Western பெயர்களை சூட்டி விற்பது எந்த விதத்தில் நியாயம்?” என்பதே இணையவாசிகளின் ஒட்டுமொத்தக் குரலாக இருந்தது. இணையவாசிகளின் கடுமையான எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் பார்த்து சுதாரித்துக்கொண்ட அந்த நிறுவனம், உடனடியாகத் தங்களின் வெப்சைட்டில் அந்த ஆடையின் பெயரை மாற்றியது. ‘பூவேலைப்பாடுகள் கொண்ட மேக்ஸி ஆடை’ என்றிருந்த அந்த நீளமான பெயரை நீக்கிவிட்டு, ‘சேலையினால் ஈர்க்கப்பட்ட கவுன்’ என்று மாற்றியமைத்தது.

ஆனால், இணையவாசிகள் சும்மா விடுவார்களா? பெயரைக் மாத்தியவுடன் அமைதியாகிவிடாமல், “என்னாது… கவுனா? சேலையை எப்படி உங்களால் கவுன் என்று சொல்ல முடியும்?” என்று அடுத்த கட்ட ட்ரொல்களையும் கிண்டல்களையும் கையில் எடுத்தனர். பாரம்பரியமிக்க சேலையின் ப்ளீட்டுகள் மற்றும் பல்லு அமைப்பு அப்படியே இருக்க, அதனை எப்படிக் கவுன் என்று பெயர் மாற்ற முடியும் என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.