ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்காய் நகரில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் அச்சுறுத்தும் பந்துவீச்சால் வங்கதேச அணி வெறும் 64 ரன்களுக்குச் சுருண்டது. டார்வின் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, இந்தப் போட்டியில் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கேப்டனின் முடிவைச் சற்றும் தாமதிக்காமல் நியாயப்படுத்தினார் மிட்செல் ஸ்டார்க். போட்டியின் முதல் பந்திலேயே ஷாத்மன் இஸ்லாம், கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் இன்னிங்ஸின் முதல் பந்தில் ஸ்டார் விக்ரட்டை வீழ்த்துவது இது நான்காவது முறையாகும்.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரில் தன்சித் ஹாசனை டக் அவுட் ஆக்கிய ஸ்டார்க், அடுத்த பந்திலேயே வங்கதேச கேப்டன் ஹுசைன் சாண்டோவையும் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார். சாண்டோ டி.ஆர்.எஸ் ரிவ்யூ எடுத்தும் பலனில்லை. ஹாட்ரிக் வாய்ப்பை நழுவவிட்டாலும், தொடர்ந்து மிரட்டிய ஸ்டார், மோமினுல் ஹுக் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோரையும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார்.
இதனால் வங்கதேச அணி வெறும் 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாகத் தடுமாறியது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை இழந்து அந்நாடு பதிவு செய்த மிகக்குறைந்த ஸ்கோராகும். முஷ்ஃபிகுர் ரஹீம் (5) மற்றும் மெஹதி ஹசன் மிதாஸ் (11) இருவரும் சிறிது நேரம் போராடி அணியின் ஸ்கோரை மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 35/6 ஆக உயர்த்தினர்.
பின்னர் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் வங்கதேச அணியின் வால் சுருண்டது. இறுதியில் ஷோரிஃபுல் இஸ்லாமை அவுட் செய்து தனது 6 வது விக்கெட்டை வீழ்த்தினார் . வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெறும் 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலிய அணிக்கு இப்போட்டியில் முழுமையான ஆதிக்கத்தைத் பெற்றுத் தந்துள்ளார்.
மேலும் இந்த போட்டியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் அதிகபட்சமாக 230 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில் இரண்டாம் இடத்தில் பேட் கம்மின்சும், மூன்றாம் இடத்தில் நாதன் லயனும் உள்ளனர்.
