தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தசரா பண்டிகை வாரத்தில் இரண்டு மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து மோதவுள்ள செய்தி, திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘OM Chapter 1: Udhiram’ திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சூழ்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதியே திரைக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே ஒரு நாள் இடைவெளியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகிய இருவரின் படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால், திரையரங்குகளை ஒதுக்குவதில் பெரிய அளவிலான போட்டி நிலவும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தசரா பண்டிகை விடுமுறை நாட்களை இலக்காகக் கொண்டு இவ்விரு படங்களும் களமிறங்குவதால் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் கடுமையான போட்டி இருக்கும்.
இரண்டு திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கும் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறப்போவது எந்தத் திரைப்படம் என்பது குறித்த சுவாரசியமான விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.
