“பெற்ற தாயை விட பெரியது ஏது?” என்பார்கள். ஆனால், பெற்றெடுத்த தாயே தன் மகனின் வெறிச்செயலுக்குப் பலியான கோரச் சம்பவம் ஒன்று திருச்செந்தூர் அருகே அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற பேராசிரியை ஒருவர் தனது சொந்த மகனாலேயே அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், அந்தப் பிணத்தின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்கப்பட்டதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது திருச்செந்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் அன்புமணி. இவர் ஒரு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி ரேணுகா (62), பேராசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தங்கபாலன் (27). தங்கபாலன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இதற்காகத் தொடர் சிகிச்சையிலும் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று, தந்தை அன்புமணி குடும்பக் கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் ரேணுகாவும், இளைய மகன் தங்கபாலனும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென தாய் மற்றும் மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. மனநலப் பாதிப்பு மற்றும் ஆத்திரத்தின் உச்சத்திற்குக் சென்ற தங்கபாலன், பெற்ற தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ரேணுகாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரேணுகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாயைக் கொன்ற கொடூரத்தோடு நிற்காமல், தான் செய்த கொலையைச் சென்னையில் போலீசாக இருக்கும் தனது அண்ணனுக்கு நிரூபிக்கும் வகையில், தாயின் இறந்துபோன உடலைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துள்ளார் தங்கபாலன். இதைக் கண்டு நடுங்கிப்போன மூத்த மகன் கதறி அழுததுடன், உடனடியாகத் திருச்செந்தூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் துரிதமாகச் செயல்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டின் உள்ளே தாயின் உடல் அருகே எந்தவிதச் சலனமுமின்றி அமர்ந்திருந்த தங்கபாலனைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே ரேணுகாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி தங்கபாலனைக் கைது செய்து, தற்போது அவரும் மருத்துவமனையில் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் கொலைச் சம்பவம் திருச்செந்தூர் வட்டாரத்தையே உலுக்கியுள்ளது.
