ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 60 வயது மூதாட்டியை, ஆஷா பணியாளர் ஒருவர் தனது முதுகில் சுமந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்நகர் தொகுதிக்கு உட்பட்ட நாடிகான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளம் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்த நிலையில், நடமாட முடியாத நிலையில் இருந்த மூதாட்டி உதவிக்காக காத்திருந்தார்.

நாடிகான் மற்றும் பாரத்பூர் பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்த மினதி சாகு என்ற ஆஷா பணியாளர், வெள்ள நிலைமை குறித்து அறிந்து கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வீட்டின் வாசலில் தனியாக சிக்கியிருந்த 60 வயது பசந்தா தாஸை அவர் பார்த்தார். காலில் ஏற்பட்ட நீண்டகால பாதிப்பு காரணமாக அவரால் சொந்தமாக நடக்க முடியாத நிலை இருந்தது. மேலும், அவரது மகன் தனது கர்ப்பிணி மனைவிக்காக மருத்துவ உதவி பெறச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

 

வெள்ளநீர் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்ததால், மூதாட்டியை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற மினதி சாகு முடிவு செய்தார். வேறு எந்த போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில், மூதாட்டியை தனது முதுகில் சுமந்தபடி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வெள்ளநீரில் நடந்து சென்றார். முழங்கால் அளவுக்கு உயர்ந்திருந்த தண்ணீரையும், வேகமாக சென்ற நீரோட்டத்தையும் கடந்து அவர் மூதாட்டியை அருகிலிருந்த பட்டானா சமூக மையத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அந்த மையம் அப்போது தற்காலிக வெள்ள நிவாரண முகாமாக செயல்பட்டு வந்தது.

மினதி சாகுவின் இந்த துணிச்சலான செயலுக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பத்ரக் மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மதுஸ்மிதா சதபதி, பேரிடர் காலங்களில் முன்கள சுகாதாரப் பணியாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பாராட்டியுள்ளார். ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து காணப்படும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.