பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சைக்காக அவரை இரண்டு நாட்களுக்குள் தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இம்ரான் கான் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். தோஷகானா வழக்கு தொடர்பாக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி நேரில் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறைத் துறை, காவல்துறை, நிர்வாகம் மற்றும் ரேஞ்சர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

 

இம்ரான் கானின் பாதுகாப்புக்காக மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஆகஸ்ட் 1-ம் தேதி மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர், இம்ரான் கானுக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்ததாகவும், இதயத் துடிப்பு அதிகரித்தல், தலைவலி மற்றும் அமைதியின்மை போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினரை அடிக்கடி சந்திக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்ரான் கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஆரிஃப் அல்வி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனை நீதிக்கான ஒரு முக்கியமான தொடக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் கூட்டமாக திரள வேண்டாம் என்றும், மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் PTI கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இம்ரான் கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பது பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.