மகாராஷ்டிர மாநிலத்தில், ஜாமீனில் வெளிவந்த ரவுடி கௌரவ் பங்கஜ் ரக்டே என்பவன், அவனது நண்பரும் சக ரவுடியுமான கௌரவ் ராவத் மற்றும் அவரது கூட்டாளியால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட ரக்டே மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை என 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், இக்கொலையில் தொடர்புடைய ராவத் மற்றும் அவனது கூட்டாளி அபிஷேக் வாஸ்னிக் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளன.

இந்தக் கொலைச் சம்பவத்திற்கு ஒரே பெண்ணை இருவரும் காதலித்ததே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘ராணி’ என்ற பெண்ணை ரக்டே காதலித்து வந்த நிலையில், அவன் சிறையில் இருந்த காலத்தில் ராவத்துடனான பழக்கத்தால் அப்பெண் அவருடன் நெருக்கமானார். குற்ற உலகத்தை விட்டு விலக விரும்பிய அந்தப் பெண், ராவத்துடன் இணைந்து உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். ஜாமீனில் வெளிவந்த ரக்டேவுக்கு விஷயம் தெரியவரவே, அவர் கடும் ஆத்திரமடைந்தார்.

சம்பவத்தன்று, அப்பெண் ராவத்தின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த ரக்டே வீட்டின் மீது கற்களை எறிந்து, வீட்டிலிருந்த பொருட்களை உடைத்துத் தகராறில் ஈடுபட்டான். உயிருக்குப் பயந்து பின்வாசல் வழியாகத் தப்பியோடிய ராவத்தையும் அவரது நண்பர்களையும் ரக்டே பழிவாங்கும் நோக்கில் துரத்திச் சென்றான். அப்போது அவர்களுக்கிடையே நடந்த சண்டையில் ரக்டே கீழே விழுந்தான்.

அப்போது அங்கு வந்த ராவத்தின் கூட்டாளி வாஸ்னிக், ரக்டேவின் கையிலிருந்த கத்தியைப் பறித்து அவனைச் சரமாரியாகக் குத்தினான். ரக்டே ரத்த வெள்ளத்தில் சரிந்ததும் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதைக் கண்ட ரோந்துப் பிரிவு காவலர், சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் குற்றவாளியைத் துரத்திச் சென்று, தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்தியுடன் ராவத்தைப் பிடித்தார். பலத்த காயமடைந்த ரக்டே மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மோதல் ஒரு காவல் எல்லைக்குள்ளும், கொலை மற்றொரு காவல் எல்லைக்குள்ளும் நடந்ததால், எந்தக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது என்பதில் காவல்துறைக்குச் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. இறுதியாகப் பெல்தரோடி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.