கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சின்னபேள கொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா (32), விவசாயி. இவருடைய மனைவி பிரேமா (28). இந்தத் தம்பதிக்கு தனுஷ் (11), வெற்றி (8) என்ற மகன்களும், லக்ஷயா (10) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
மூத்த மகன் தனுசுக்கு வரும் 30-ந்தேதி பிறந்தநாள் வருவதையொட்டி, அவருக்குப் புத்தாடை வாங்கித் கொடுத்துவிட்டு மகன்களைப் பார்த்துவிட்டு கணவனும் மனைவியும் காரில் ஊருக்குத் திரும்பிச் கொண்டிருந்தனர். அப்போது இரவு 8 மணி அளவில் திடீரென்று தம்பதி இடையே காரில் கடுமையான தகராறு வெடித்தது. உடனே எல்லப்பா காரை ஓரமாக நிறுத்தினார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிரேமா காரில் இருந்த கத்தியை எடுத்து கணவனை குத்த முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட எல்லப்பா மனைவியைத் தடுத்ததுடன், அவரிடமிருந்து கத்தியைப் பிடுங்கி பதிலுக்கு அவசர ஆத்திரத்தில் அவரையும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேமா காரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தன் மனைவியின் உடலை அங்கேயே காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, ரத்தக்காயங்களுடன் நேராக காவல் நிலையத்திற்குச் சென்றார் எல்லப்பா. அவரது நிலையைக் கண்டு அதிர்ந்த போலீசார் விசாரித்தபோது, தான் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகவும், சரண் அடைய வந்ததாகவும் அவர் கூறினார். உடனடியாக அவரை போலீசார் ஒசூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேமா போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. எல்லப்பாவுக்கும் பிரேமாவுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே எல்லப்பாவுக்கும் வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமா, கணவருடன் தன்னை சேர்த்துவைக்குமாறு கடந்த 14-ந்தேதி ஒசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அங்கு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, “வேறு பெண்ணுடன் எப்படி பழகலாம்?” என்று ஆத்திரமடைந்த பிரேமா, காவல் நிலையத்திலேயே வைத்து கணவரைச் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. தன்னைச் செருப்பால் அடித்து அவமானப்படுத்திவிட்டாளே என்ற ஆத்திரம் எல்லப்பாவின் மனதில் ஆழமாகப் புதைந்துள்ளது.
அதன்பிறகு போலீசார் சமாதானம் செய்து அனுப்பியதன் பேரில் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர். சம்பவத்தன்று மகன்களைப் பார்ப்பதற்காகக் காரில் செல்லும்போதே, போலீஸ் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பலிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் எல்லப்பா கத்தியை உடன் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், காரில் ஏற்பட்ட சண்டையின்போது மனைவியும் தன்னைத் தாக்க முற்பட, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற கணவனே மனைவியை வெட்டிக் கொன்ற கோரச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
