குடும்பத்தில் நடக்கும் சாதாரண சண்டைகளையும், கருத்து வேறுபாடுகளையும் மனரீதியான சித்ரவதை என்று கூறி விவாகரத்து பெற முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.                                                                                                                                                                                                       மராட்டியத்தைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் இல்லற வாழ்க்கையில் நாளடைவில் விரிசல் விழத் தொடங்கியது. மனைவி கோபக்கார சுபாவம் கொண்டவர் என்றும், தனது தாயாருடன் தினமும் சண்டை போட்டு தனக்கு மனரீதியான கொடுமை தருவதாகவும் கூறி கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், அந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டதுடன், மனைவிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி பால்கே மற்றும் ராஜ் வாகோடே அடங்கிய அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப திருமண பந்தத்தின் பொறுப்புகள் மாறியிருந்தாலும், எந்தவொரு இல்லற வாழ்க்கையிலும் சின்னச் சின்ன சண்டைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது மிகவும் சகஜமான ஒன்றுதான் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் வெறும் எரிச்சலூட்டும் சம்பவங்களை எல்லாம் மனரீதியான சித்ரவதை என்று முத்திரை குத்திவிட முடியாது என்றும், சட்டப்படி விவாகரத்து வழங்க வேண்டுமென்றால் அந்த கொடுமையானது தம்பதிகள் இருவரும் இனி ஒன்றாக சேர்ந்து வாழவே முடியாதளவுக்கு முற்றியிருக்க வேண்டும் என்றும் அமர்வு தெளிவுபடுத்தியது. ஓரிரு தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து மனரீதியான கொடுமையைத் தீர்மானிக்க முடியாது என்றும், ஒட்டுமொத்த திருமண வாழ்க்கையையும் முழுமையாக ஆராய்ந்தே விவாகரத்து வழங்க முடியும் என்றும் கூறி கணவரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.