சர்வதேச கடல் பரப்பில் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களாக, ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதியில் இரண்டு வணிகக் கப்பல்களைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இந்த இரண்டு கப்பல்களிலும் சேர்த்து மொத்தம் 22 இந்தியர்கள் சிக்கியுள்ளதால், அவர்களின் குடும்பத்தினரிடையே பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

எரித்திரியா நாட்டுக்கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற ‘எம்டி ஷிபு 1’ என்ற வணிகக் கப்பல், ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஆயுதம் ஏந்திய 6 கடற்கொள்ளையர்கள் திடீரென இந்தக் கப்பலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கடத்தினர். இச்சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்தக் கப்பலில் மொத்தம் 20 பணியாளர்கள் இருந்துள்ளனர்; இவர்களில் 16 பேர் இந்தியர்கள் ஆவர். தற்போது கப்பல் இருக்கும் இடம் குறித்தத் துல்லியமான தகவல் இல்லை என்றாலும், பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியாவின் கடல்சார் நிர்வாகத் தலைமை இயக்குநரகம் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

மறுபுறம், கேமரூன் கொடியுடன் இயங்கிய ‘எம்வி லுடிப்’ என்ற வணிகக் கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகில் கடந்த திங்கள்கிழமை அன்று கடத்தப்பட்டுள்ளது. சோமாலியாவின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இப்பகுதியில் உள்ள துருக்கி ராணுவப் பயிற்சி மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்புக் கருவிகள் இந்தக் கப்பலில் இருந்தன.

‘போலார் மூவ்மென்ட் ஷிப்பிங்’ நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் கொண்ட கும்பல் கடத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் ‘எம்வி ஸ்வார்ட்’ என்ற கப்பலைக் கடத்திய அதே கடற்கொள்ளையர் கும்பல்தான் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. கப்பல் வடக்கு சோமாலியாவின் கடற்கரையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கப்பலிலும் பணியாளர்களின் நிலை குறித்தும் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. துருக்கி தரப்பும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு கப்பல்கள் கடத்தப்பட்டிருப்பதோடு, அதில் மொத்தம் 22 இந்தியர்கள் மாட்டியிருப்பது கடல்சார் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.