வெளியூரில் உழைத்துவிட்டு குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்த கணவனுக்குக் கிடைத்த அதிர்ச்சி பரிசும், அதன்பிறகு அந்த கணவன் எடுத்த விபரீதமான முடிவும் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவருடைய மனைவி சரிதா. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் வறுமையைப் போக்க கணவர் ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி சரிதாவும் குழந்தைகளும் சொந்த ஊரிலேயே வசித்து வந்துள்ளனர்.

கணவர் வெளியூரில் இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட 45 வயதான சரிதாவுக்கு, ரயிலில் பட்டாணி விற்றுவரும் 25 வயதான அஜய் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் தன் மூன்று குழந்தைகளையும் கணவரையும் மறந்துவிட்டு, காதலன் அஜய்யுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் சரிதா.

விஷயம் அறிந்ததும் பதறிடித்து ஊர் திரும்பிய ஜீவநாத், மனைவியைத் தேடி பல இடங்களில் அலைந்து திரிந்துள்ளார். ஒரு வழியாக கடந்த வாரம் ரயில் நிலையம் ஒன்றில் வைத்து சரிதாவையும் அவரது காதலன் அஜய்யையும் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர். சரிதாவின் காலில் விழாத குறையாக, “எல்லாவற்றையும் மறந்துவிட்டு என்னுடன் வந்துவிடு” என்று கணவன் கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால், சரிதாவோ துளியும் இரக்கமின்றி, “இனிமேல் என் வாழ்நாள் முழுவதும் அஜய்யுடன்தான் வாழுவேன்” என்று கறாராகக் கூறிவிட்டார்.

மனைவி தனக்கு வர மறுத்துவிட்டதை உணர்ந்த ஜீவநாத், ஒரு விநாடி யோசித்தார். சரிதாவின் விருப்பப்படியே அவர் விரும்பிய வாழ்க்கையைத் தந்துவிட முடிவு செய்தார். உடனே அந்த ஜோடியை நேராகப் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனது மனைவிக்கும் அந்த இளைஞருக்கும் தன் கையாலேயே சொந்தமாகத் திருமணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து ஜீவநாத் பேசுகையில், “நான் என் மனைவியுடன் ஒற்றுமையாக வாழத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் அவளுக்கோ என்னுடன் வாழ விருப்பமில்லை. அதனால், அவளுடைய மகிழ்ச்சிக்காக என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன்” என்று  தெரிவித்தார்.

மறுபுறம், தன் திருமண வாழ்க்கை முறிந்துபோனதற்குக் காரணம் கணவர் ஜீவநாத் தான் என்று சரிதா தலைகீழாகக் குற்றம்சாட்டுகிறார். குடும்பச் செலவுக்கு ஜீவநாத் போதிய பணத்தை அனுப்பியதில்லை என்றும், அடிக்கடி தங்களுக்குள் சண்டை வந்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும் தன் மனைவியைக் கள்ளக்காதலனுக்கே கல்யாணம் செய்து வைத்துள்ள இந்தக் கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.