அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு கடும் பொருளாதார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் செய்வது அல்லது அந்நாட்டுக்கு எந்தவிதமான உதவியையும் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பொருளாதாரத்தை மேலும் தனிமைப்படுத்தும் வகையில் மிகப்பெரிய நடவடிக்கையை தொடங்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார். வங்கிகள், தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மூலம் ஈரானுக்கு உதவி கிடைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றம், கப்பல் பதிவு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஈரானுக்கு கிடைக்கும் ஆதரவை தடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானின் ராணுவ திறன் மற்றும் பொருளாதார நிலை குறித்து டிரம்ப் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். ஈரானை உலகளவில் தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்காவின் கூட்டணி நாடுகளின் ஆதரவு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பிரச்சினை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
மறுபுறம், போர் நீடித்து வரும் நிலையில் டிரம்ப் தனது சொந்த நாட்டிலேயே அரசியல் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த முயற்சி முடங்கியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்டமாக அமெரிக்கா எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
