தெருவோரக் கடைகளில் வியாபாரத்தை விருத்தி செய்யவும் வாடிக்கையாளர்களைக் கவரவும் வியாபாரிகள் செய்யும் வித்தியாசமான முயற்சிகள் பல நேரங்களில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிடும். அந்த வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தெருவோரச் சிறு வியாபாரி தனது வியாபாரத்திற்காகச் செய்த விசித்திரமான நுட்பம் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஒரே கடாயில் டீ மற்றும் பக்கோடா இரண்டையும் ஒரே நேரத்தில் தயாரிக்கும் அவரது இந்த அசாத்தியமான யுக்தி, சோஷியல் மீடியா பயனர்களின் கவனத்தை ஈர்த்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கொதிக்கும் எண்ணெயைக் கொண்டு பக்கோடா பொரிக்கும் அதே பெரிய கடாயின் நடுவில், ஒரு சிறிய பாத்திரத்தைப் பொருத்தி அதில் டீ கொதிக்க வைக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் டீயும் ரெடியாகிறது, மொறுமொறுப்பான பக்கோடாவும் தயாராகிறது. எரிபொருளையும் நேரத்தையும் மிச்சப்படுத்த அந்த வியாபாரி யோசித்த இந்த ஐடியா பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருந்தாலும், சுகாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் இது எந்த அளவிற்குச் சரியானது என்ற கேள்வியையும் பலரிடம் எழுப்பியுள்ளது.
இதனால் எண்ணெய்யின் வெப்பமும் டீயின் கொதிநிலையும் ஒரே இடத்தில் கையாளப்படுவது சற்று ஆபத்தானது என்றாலும், அந்த வியாபாரியின் படைப்பாற்றலை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலவிதமான சுவாரசியமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் “இதுதான் உண்மையான திறமை, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என அவரது ஐடியாவைப் பாராட்டி வரும் வேளையில், மற்றவர்களோ “டீயில் எண்ணெய்யின் வாசம் அடிக்கும், சுகாதாரத்திற்கு இது உகந்தது அல்ல” எனக் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். எது எப்படியோ, தனது வித்தியாசமான யோசனையின் மூலம் இணையத்தில் ஒரே இரவில் புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார் அந்தப் பாகிஸ்தானி வியாபாரி.
See this Instagram video by @thatsindhifoodie https://t.co/KofWbVksAk
“>
