உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு வித்தியாசமான காதல் விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கணவனை இழந்த மூன்று குழந்தைகளின் தாயான தபஸ்ஸும், ஆறு குழந்தைகளின் தந்தையான முகமது உமரும் தங்களது வாழ்க்கையை இணைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

முராதாபாத் மாவட்டம் ரானினாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் தபசுசம். இவரது கணவர் ரியாஜுல் என்பவர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கணவனின் மறைவுக்குப் பிறகு, தனது மூன்று குழந்தைகளுடன் மாமியார் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார் தபஸ்ஸும். இந்தச் சூழலில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முகமது உமர் என்பவருடன் தபஸ்ஸூமுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உமர் ஒரு வாகன மெக்கானிக்  ஆவர். மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு குழந்தைகள் உள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது.

குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாகக்  இருவரும் நிக்காஹ் செய்துகொண்டதோடு, நீதிமன்றத் திருமணத்தின் சட்டப்பூர்வ நடைமுறைகளையும் நிறைவு செய்துள்ளனர். இந்தத் திருமணம் குறித்துத் தகவலறிந்த தபஸ்ஸூமின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விவகாரம் முற்றியதை அடுத்து, கிராமப் பிரதான் ஜாஹித் ஹுசைன் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்களின் முன்னிலையில் அவசரப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அந்தப் பஞ்சாயத்தில், தாங்கள் இருவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரில்தான் ஒன்று சேர்ந்து வாழ்வதாகத் தபஸ்ஸூம் மற்றும் முகமது உமர் இருவரும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இருவரின் சம்மதத்தையும் கேட்டறிந்த பஞ்சாயத்து, அவர்கள் இணைந்து வாழ்வதற்கு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, தபஸ்ஸூம் தனது குழந்தைகளுடன் முகமது உமரின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, தபஸ்ஸூமை தாங்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டதாகவும், ஆனால் அவர் தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே செல்வதால் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பெண்ணின் மைத்துனர் தெரிவித்தார். எதிர்காலத்தில் அந்தப் பெண்ணுடன் எந்தவிதத் தொடர்பும் அல்லது பொறுப்பும் தங்களுக்கில்லை என்றும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முராதாபாத் கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த விசித்திரத் திருமணம் அப்பகுதியில் தற்பொழுது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.