கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் 3-வது சீசனை முன்னிட்டு, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோഹன்லாலும், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனும் இணைந்து நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது.

கேரளாவின் இரு மிகப்பெரிய அடையாளங்களான சினிமாவும் கிரிக்கெட்டும் ஒரே ஃபிரேமில் இணைந்திருப்பது, அம்மாநில ரசிகர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள விளையாட்டு மற்றும் சினிமா விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் மிகவும் நகைச்சுவையான பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பர வீடியோவில், சஞ்சு சாம்சனின் காரில் ஏறும் மோஹன்லால், ஓட்டுநர் சீட்டில் இருப்பது சஞ்சுதான் என்பதை அறியாமல் அவரிடம் இயல்பாகப் பேசத் தொடங்குகிறார்.

காரை கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்திற்கு விடச் சொல்லும் மோஹன்லாலிடம், “சேட்டன் கிரிக்கெட் விளையாடுவீங்களா?” என்று சஞ்சு கேட்க, அதற்குத் தனது பிரபல செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் அனுபவங்களை மோஹன்லால் நினைவுகூர்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, “இந்த சஞ்சு சாம்சனை உங்களுக்குத் தெரியுமா?” என்று சஞ்சு கேட்க, “தெரியாம என்ன.. நான் சொல்லித் தான் அவர் ராஜஸ்தான் அணியில் இருந்து சென்னைக்கு வந்தாரு” என மோஹன்லால் பதில் சொல்வதும், இறுதியில் ஓட்டுவது சஞ்சுதான் எனத் தெரிந்து அதிர்ச்சியடைவதும் ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் தனது அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களைக் கட்டிப்போடும் சஞ்சு சாம்சன், இப்படிக் கேமராவுக்கு முன்னாலும் மோஹன்லால் போன்ற ஒரு மாபெரும் நடிகருக்கு ஈடுகொடுத்துத் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விளம்பர வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கிரிக்கெட்டையும் சினிமாவையும் மிகச் அழகாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், வரவிருக்கும் கேரளா கிரிக்கெட் லீக் தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.